புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்வபம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பலரும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெட்ண்ட் செய்து வருகின்றனர். பல பிரபலங்களும் இதுகுறித்து தங்களின் கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகை சாய் பல்லவி கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“மனித இனத்தின் மேலான நம்பிக்கை அதிவேகமாகக் குறைந்து வருகிறது. குரலற்றவர்களுக்கு உதவுவதற்காக நமக்களிக்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். பலவீனமானவர்களைக் காயப்படுத்துகிறோம். நம் அரக்கத்தனமான இன்பத்துக்காகக் குழந்தைகளைக் கொல்கிறோம்.
கடக்கும் ஒவ்வொரு நாளும், இயற்கை மனித இனத்தைச் சுத்திகரிக்க எண்ணுவதாகவே தோன்றுகிறது. இப்படி ஒரு மோசமான வாழ்வை வாழ்ந்துகொண்டு, இப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பார்த்து எதுவும் செய்ய இயலாத பயனற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் இந்த உலகம் இன்னொரு குழந்தையின் பிறப்புக்குத் தகுதியானதல்ல” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "இதுபோல சம்பவங்கள் வெளியே தெரிந்து அது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானால்தான் நீதி கிடைக்கும் என்கிற போக்கும் மாற வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.