'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கி வரும் படம் 'ஆர்.ஆர்.ஆர்' என்று அழைக்கப்படும் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது. தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது, இந்த வருட ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
கரோனா ஊரடங்கு முடிந்து சகஜ நிலைக்குத் திரும்பியவுடன், புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் சினிமா பட ஷூட்டிங்குக்கு அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கி வருகின்றன. அதனால் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. "மார்ச் மாதம் விடாது உழைத்துக் கொண்டிருந்தோம், திடீரென கரோனாவால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. மீண்டும் ஷூட்டிங் தொடங்கியுள்ளோம். இந்தமுறை இரட்டிப்பாக உழைக்க இருக்கிறோம்" என்று இயக்குனர் ராஜமௌலி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தற்போது, 50 நாட்கள் இரவில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டதாக 'ஆர்.ஆர்.ஆர்' படக்குழு அறிவித்துள்ளது. இதில் 50 நாட்களும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கியதாகத் தெரிவித்துள்ளது படக்குழு. இதில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர். இருவருமே கலந்து கொண்டுள்ளனர். அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்றும் படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.