ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆஸ்கருக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு விண்ணப்பித்துள்ளது.
இப்படத்தின் விருது நிகழ்வுகளுக்காக பல்வேறு வெளிநாடுகளில் சுற்றி வருகிறது படக்குழு. சமீபத்தில் இப்படத்தின் இசையமைப்பாளருக்கு கோல்டன் குளோப் விருது கிடைத்தது. நாட்டு நாட்டு பாடலுக்காக அவ்விருதை கீரவாணி பெற்றுக் கொண்டார். அத்தோடு இயக்குநர் ராஜமெளலி உலகப்புகழ் பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்ததை படத்துடன் வெளியிட்டு ‘கடவுளைச் சந்தித்தேன்’ என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், மற்றொரு உலகப்புகழ் பெற்ற இயக்குநரான ஜேம்ஸ் கேமரூனை சந்தித்ததை “நீங்கள் என் படத்தை பார்த்தீர்கள், அதை விரும்பினீர்கள், அது குறித்து என்னிடம் பேசினீர்கள் என்பதை நம்ப முடியாமல் இருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 'கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்டு' விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளில் மேலும் 2 சர்வதேச விருதுகள் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கு கிடைத்துள்ளது. ராஜமௌலி நேரில் சென்று இந்த விருதுகளைப் பெற்றுக்கொண்டார்.