
தான் நடித்த முதல் படமான 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தேசிய விருது வாங்கி அனைவரையும் ஆச்சர்யபட வைத்தவர் குத்து சண்டை வீராங்கனையும், நடிகையுமான ரித்திகா சிங். 'இறுதிச்சுற்று' படத்தில் குத்து சண்டை வீராங்கனையாக நடித்து பெயர் வாங்கிய அவர் அதன் பின் விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, ராகவா லாரன்சுடன் ‘சிவலிங்கா’ படங்களில் நடித்தார். இந்நிலையில் தற்போது ‘வணங்காமுடி’ படத்தில் அரவிந்த் சாமியுடன் நடித்து வரும் ரித்திகா குறும்படம் ஒன்றிலும் நடித்து இருக்கிறார். இந்தி படகலைஞர்கள் ஒன்றாக இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ‘ஐயம் சாரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தினந்தோறும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகளை பேசும் இசை குறும்படமாக உருவாகி இருக்கிறது. இதை தேசிய விருது பெற்ற அஷ்வின் சதுர்த்தி இயக்கி இருக்கிறார். இந்நிலையில் இந்த குறும்படத்தை பற்றி ரித்திகாசிங் பேசுகையில்..."இது பெண்கள் விழிப்புணர்வு குறும்படம். நானும் ஒரு பெண் என்பதால் ஆர்வமுடன் நடித்தேன். பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை நிறுத்த வைக்கும் குறும்படமாக இது உருவாகி இருக்கிறது. பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டும் என்பதை பலமுறை சொல்லி இருக்கிறேன். இப்போதும் அதை வற்புறுத்துகிறேன். அதை பலமாக சொல்ல இந்த படம் உதவியது" என்றார்.