ஹிந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்த பின்னர் ஹிந்தியில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஆதித்ய சோப்ராவை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ராணிமுகர்ஜி நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் நடித்த 'ஹிச்க்கி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராணிமுகர்ஜி திருமணமான நடிகைகளின் நிலை குறித்து பேசியபோது, "இந்தியாவில் கதாநாயகர்கள், திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று அந்த குழந்தைகளும் வளர்ந்து பெரிய ஆளாகி நடிக்க வந்தாலும் கூட தொடர்ந்து சினிமாவில் நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நடிகைகளின் நிலை வேறு. அவர்களுக்கு திருமணம் ஆனதுமே ஒதுக்கி விடுவார்கள். திரையுலகில் ஆணாதிக்கம் அதிகம் இருக்கிறது.
பெண்கள் யாரையும் சார்ந்து வாழாமல் தங்கள் திறமையை சுயமாக நிரூபிக்க வேண்டும். கணவனுடன் சேர்ந்து வாழும்போது நமது தனித்தன்மையை விட்டுக் கொடுக்க கூடாது. கணவர்களுக்கு மனைவிகள் அடிமையாகக் கூடாது. கணவனுக்கு கவுரவம் கொடுக்கும் அதே நேரம் நமது கவுரவத்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். கணவன் காலடியில் மனைவி விழுந்து கிடக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஆண்-பெண் சமநிலை, வார்த்தையில் மட்டும் இல்லாமல் தினமும் அதை அனுபவிக்க வேண்டும். எல்லா துறைகளிலும் திருமணமான பெண்கள் வேலை செய்ய முடிகிறது. சினிமாவில் மட்டும் புறக்கணிக்கும் நிலை இருக்கிறது. திருமணமானதும் நடிகைகள் சினிமாவை விட்டு விலகி விட வேண்டும் என்ற நிலைமை இருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணை, அவருடைய மகள், இவரது மனைவி, அந்த பையனின் அம்மா என்று பேசி அவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த விடாமல் அடிமைப்படுத்தி வைத்து இருக்கும் போக்கு மாற வேண்டும்" என்றார்.