'ரங்கோலி' படத்தின் குழுவினருடன் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ஒரு கலகலப்பான சந்திப்பு நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
"இந்த கிரவுண்ட் தான் உங்களுடையது. இந்த ஊரே என்னுடையது" என்கிற வசனம் இந்தப் படத்தில் இருக்கிறது. நிச்சயம் படத்தில் அரசியல் இருக்கும். ஆனால் நீங்கள் நினைப்பது போல் இருக்காது. அனைவரும் பேச வேண்டும் என்று நினைக்கிற ஒரு விஷயத்தை நாங்கள் பேசியிருக்கிறோம். தோபிகாட் என்கிற இடத்தை படத்தில் நாங்கள் அதிகம் காட்டியுள்ளோம். அனைத்து அழுக்குகளையும் சலவை செய்து வண்ணங்களாக மாற்றும் இடம் அது. கதை நடக்கும் களமும் அதுதான். அதனால் தான் 'ரங்கோலி' என்கிற டைட்டில் வைக்கப்பட்டது. மனதில் நீண்ட காலமாக ஓடிக்கொண்டிருந்த கதை இது.
இது நிச்சயம் ஒரு கலர்ஃபுல்லான படமாக இருக்கும். பாடல்களுக்கு செட் போடாமல் நிஜமான இடங்களில் எடுத்தோம். நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டன. நிறைய சவால்கள் இருந்தன. ஆனால் நினைத்த அனைத்தையும் செய்துவிட்டோம். சிறிய சண்டைக்காட்சிகளில் உண்மையாகவே அடித்து அந்த உணர்வை ஏற்படுத்தினோம். நடிகர்களின் ஈடுபாடு அதிகமாக இருந்தது. அவர்களுடைய ஈடுபாட்டினால் காட்சிகள் இயல்பாக அமைந்தன. சில டேக்குகள் கடந்த பிறகு அந்த கேரக்டராகவே நடிகர்கள் மாறிவிடுவதைப் பார்க்க முடிந்தது.
அப்பா கேரக்டருக்கு ஃப்ரஷ்ஷான ஒரு முகத்தை தேடிக்கொண்டிருந்த போது முருகதாஸ் சாரை நடிக்க வைக்கலாம் என்கிற எண்ணம் வந்தது. அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். கதை சொன்னவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டார். சில நேரங்களில் நடிகர் நடிகைகள் அழும் அளவிற்கு செட்டில் திட்டு வாங்குவார்கள். அழுக வேண்டிய காட்சிகளுக்கு அது நன்கு பயன்பட்டது என்றே சொல்லலாம். படம் மிகவும் எமோஷனலாக, தத்ரூபமாக இருக்கும்.
பலருடைய வாழ்க்கையில் நடந்த கதை தான் இது. படத்தின் பிரிவியூ காட்சியில் படத்தைப் பார்த்த அனைவரும் நன்றாக என்ஜாய் செய்தனர். அந்த சிறப்பு காட்சிக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் வந்திருந்தனர். படத்தை மிகவும் பாராட்டினர். உண்மையில் இவ்வளவு பாராட்டுகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நடிகர் நடிகைகளின் என்ட்ரியின் போது விசில் அடித்து என்ஜாய் செய்தனர். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறோம். அனைவரும் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும். உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களிடமும் சொல்லுங்கள்.