Skip to main content

”ஒரு சினிமாக்காரருக்கு இன்னொரு சினிமாக்காரரின் ஓட்டு வரக்கூடாது என்று தடுத்தார்களா?” - கொதித்தெழுந்த ரமேஷ் கண்ணா  

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

பாராளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது. 12 மாநிலங்களில் உள்ள 96 மக்களவை தொகுதிகளுக்கு தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 38 தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் வாக்கு சாவடிக்கு ஓட்டு போட வந்த நடிகர் ரமேஷ் கண்ணாவின் பெயர் ஓட்டு பட்டியலில் நீக்கப்பட்டுள்ளது. இதனால் கடுப்பான அவர் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

 

rk

 

"அவசர வேலையாக நாகர்கோயில் செல்லவிருப்பதால் இன்று காலை 6 மணிக்கே வெகுநேரம் காத்திருந்து ஓட்டு போடுவதற்காக வாக்கு சாவடிக்கு சென்றிருந்தேன். ஓட்டு போடுவது என்பது ஒவ்வொரு குடிமகனுடைய கடமை என்று தேர்தல் ஆணையம் பக்காவாக விளம்பரம் செய்கின்றனர். அதன்படி நானும் உணர்ச்சியோடு ஓட்டு போட சென்றிருந்தேன். ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக ஓட்டுப்போடும் பட்டியலில் இருந்து என் பெயர் நீக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு, ஐந்து முறை அதே வாக்குச் சாவடிகளில் தான் என் ஓட்டை பதிவு செய்திருந்தேன். ஆனால் தற்போது என் பெயர் இல்லை என்கின்றனர். இது யார் தவறு...? தேர்தல் ஆணையத்தின் தவறு. விளம்பரம் மட்டும் செய்துவிட்டு பட்டியலில் பெயர் இல்லாமல் ஓட்டு போட என்ன சொன்னால் நியாயம்...? அதே சமயம் என் மனைவிக்கு மட்டும் ஓட்டு இருக்கிறது என்கின்றனர். இது என்ன நியாயம்? என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. 

 

k

 

இருப்பினும் என்னால் வாக்களிக்க முடியவில்லை. பட்டியலில் பெயர் இல்லை என்றால் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி ஓட்டு போடும் உரிமையை தேர்தல் ஆணையம் அளிக்க வேண்டும். இப்பிரச்சனைக்கு இதுதான் சரியான வழியாக இருக்கும். சர்கார் படம் வந்த பிறகுதான் '49p' என்ற சட்டம் உள்ளது பலருக்கு தெரிய வந்துள்ளது. அதுபோல் நாமும் இதற்கு போராட வேண்டுமா...? இந்த தவறுக்கு யார் பொறுப்பு ஏற்றுக் கொள்வது? இந்த தடவை என்னுடைய ஓட்டு வீணாகிவிட்டது. இப்படியே போனால் அடுத்த தடவை எப்படி ஓட்டு போடும் எண்ணம் பலருக்கு வரும்? பிறகு எப்படி புதிய தலைவர்கள் உருவெடுப்பார்கள்? இதற்கு அரசாங்கம்தான் பதில் சொல்லியாக வேண்டும். மேலும் ஒரு சினிமாகாரருக்கு இன்னொரு சினிமாக்காரரின் ஓட்டு வரக்கூடாது என்பதற்காக இதை தடுத்தார்களா என்ற சந்தேகமும் எனக்கு நிலவுகிறது" என்றார் காட்டமாக. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

 

சார்ந்த செய்திகள்