காலா பட வில்லன் நானா படேகர் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த ஒரு படப்பிடிப்பில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக, பாலியல் புகார் கூறினார் நடிகை தனுஸ்ரீதத்தா. பின் இந்தப் புகாருக்கு நானா படேகர் மறுப்பு தெரிவித்து நடிகைக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதற்கிடையே தனுஸ்ரீதத்தா நானா படேகருக்கு எதிராக மும்பை போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதற்கிடையே நடிகர் நானா படேகருக்கு ஆதரவாக நடிகை ராக்கி சாவந்த் கருத்து தெரிவித்து... 'தனுஸ்ரீதத்தா போதைக்கு அடிமையானவர் என்றும், ஓரின சேர்க்கையாளர் என்றும், என்னிடம் தவறாக நடந்துகொண்டார்' என பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து இது தொடர்பாக ராக்கி சாவந்துக்கு எதிராக ரூ.10 கோடி கேட்டு ஒரு அவதூறு வழக்கை தனுஸ்ரீதத்தா சமீபத்தில் தொடர்ந்தார்.
இந்நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தாவிடம் '25 பைசா' இழப்பீடு கேட்டு ராக்கி சாவந்த் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் பேசியபோது...."நான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி நல்லபெயரை சம்பாதித்து வைத்திருக்கிறேன். சமீப காலமாக தனுஸ்ரீ தத்தா கூறிவரும் மோசமான மற்றும் இழிவுபடுத்தும் பேச்சுகளால் எனது பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். இதை மீண்டும் ஈடுசெய்ய பல ஆண்டுகள் ஆகும். எனவே எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய தனுஸ்ரீ தத்தா '25 பைசா' இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் ஊடகங்கள் முன் பகிரங்கமாக மன்னிப்பு கோர கோர்ட்டு உத்தரவிடவேண்டும்" என்றார்.