ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜப்பான். இப்படம் கார்த்தியின் 25வது படமாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க, இயக்குநர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகிய இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவையும் கார்த்தி25 என இரண்டு திரையுலகப் பயணத்தையும் ஒரு சேரக் கொண்டாடும் வகையில் சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரமாண்ட விழா நடைபெற்றது.
இந்தநிகழ்வில் சூர்யா, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, கே.எஸ். ரவிகுமார், தமன்னா, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் பா. ரஞ்சித், சிவா, லோகேஷ் கனகராஜ், பி.எஸ். மித்ரன், ஹெச். வினோத், உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் இந்த 20 வருடங்களில் கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில், “ஒவ்வொரு முறையும் நான் ஒரு படத்திற்கான கதையை முடித்தவுடன் அதை தனித்துவமான படமாக உருவாக்கும் பாணிக்குத்தான் செல்வேன். திரைப்படங்களில் என்னை வசீகரித்தவர் சார்லி சாப்ளின். இப்போது அந்த வழியில் கார்த்தி சார் என்னுடைய இலக்கிய சிந்தனைகளுடன் கூடிய எண்ணங்களை உற்சாகப்படுத்துவது என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நிறைய பேர் இலக்கியத்தை சினிமாவுடன் இணைத்து ரிஸ்க் எடுக்க விரும்பமாட்டார்கள். ஆனால் கார்த்தி சார் வட்டியும் முதலும் புத்தகத்திலிருந்து சில முக்கியமான விஷயங்களை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.
பருத்தி வீரன் படத்தைப் போன்று ஜப்பான் கதாபாத்திரமும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். எஸ்.ஆர். பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர். பிரபு இருவருமே நண்பர்களாக இருந்ததுடன் என்னுடைய எண்ணங்களுக்கு உருக்கொடுக்க ஆதரவாகவும் இருந்திருக்கின்றனர். கார்த்தி போன்ற அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நடிகருடன் அவரது 25வது படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஜி.வி. பிரகாஷ் குமார் எனது நெருங்கிய நண்பர். இந்த மொத்த படக் குழுவினரும் கடுமையாக உழைத்துள்ளனர்” என்று கூறினார்.