கள்ள நோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணையின்போது கருப்பினத்தைச் சார்ந்த ஜார்ஜ் ப்ளாய்ட் என்னும் நபர் போலீஸாரால் கழுத்து நெருக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இதனை அடுத்து கருப்பினத்தவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு முடிவு காண வலியுறுத்தி அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இதற்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஜார்ஜ் ப்ளாய்டின் மரணத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கு எதிரான அரசின் அமைப்பை எதிர்த்து மக்களின் போராட்டம் தீவிரமாகியுள்ளது. இதையொட்டி #blacklivesmatter என்ற ஹாஷ்டேக் பல்வேறு தரப்பு மக்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்தியப் பிரபலங்களும் இந்த ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்ற நிலையில் இந்த நிறவெறி தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து இயக்குனர் ராஜு முருகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
"ஒரு மனிதனின் மூச்சுக் குழாயை இன்னொரு மனிதன் நெரித்துக் கொல்வது வரலாற்றில் இது எத்தனையாவது முறை?
நிற வெறியால்
இன வெறியால்
சாதி, மத வெறியால்
நமது குரல்வளையை அறுத்து எறியத்தான் எத்தனை வெறி கூட்டங்கள்.
உலகின் தலைவனாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு செயல்படும் அமெரிக்கா, பல நாடுகளில் போர் வெறியை வளர்த்து, ஆயுத வியாபாரம் செய்கிறது. தன் நாட்டிலும் அடிமையதிகார வெறி அரசியல் செய்கிறது. அதன் பிரதிநிதிதான் அந்த இரக்கமற்ற போலீஸ். ஆதிக்கத்திற்கு எல்லைகள் கிடையாது. ஆதிக்கத்தின் மொழி அடக்குமுறை தவிர வேறு கிடையாது. எல்லா வடிவத்திலும் ஆதிக்கம் வீழ்த்துவோம். மனித குலத்தின் சமத்துவ எதிர்காலத்தை ஒன்றிணைந்து உருவாக்குவோம் தோழர்களே!
மனிதம் வெல்லட்டும்'' எனக் கூறியுள்ளார்.