கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து வேலூரில் உள்ள இராணுவப்பேட்டையில் தங்களது வீட்டில் இருந்து ஒருவரை கட்டாயம் இராணுவத்திற்கு அனுப்பும் வழக்கம் உடைய, இராணுவ குடும்பத்தினர் இந்தப் படத்தை பார்த்துள்ளனர். மேலும் விருதுநகர் ராஜபாளையத்தில், அங்கிருக்கும் இராணுவ குடும்பத்தினர் இந்தப் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளனர். இதனிடையே இப்படத்தில் காஷ்மீர் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல இடங்களில் போராட்டம் நடத்தி திரையரங்கை முற்றுகையிட முயன்றனர். மேலும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி காஷ்மீர் மக்களை ஏன் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளீர்கள் என பல்வேறு கேள்விகள் எழுப்பி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் இராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் இப்படத்தின் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் முன்னாள் இராணுவ வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த படம் எல்லாருக்கும் நிறைய விதத்தில் கனெக்ட் ஆகியிருக்கிறது. இதன் மூலம் சினிமாவில் இருக்கிற அனைவருக்கும் ஆடியன்ஸ் பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். ஆடியன்ஸுக்கும் சினிமா எடுக்குறவங்களுக்கும் நடுவில் பாலம் என்பது அந்த படம் மட்டுமே. அதுவே போதுமானது என மறுபடியும் நிருபனமாகியுள்ளது. இந்தப் படத்தில் தேவையில்லாததை எதுவும் சேர்க்கவில்லை. ஆரம்பம் முதல் இறுதி வரை சினிமா க்ராஃப்டை நம்பி எழுதப்பட்டது. ஒரு இராணுவ வீரரின் கதையை எந்தளவு சுவாரசியமாக சொல்ல முடியும் என்கிற எண்ணத்தை முன்னே வைத்துக்கொண்டு எடுத்த படம் அமரன்” என்றார்.
அப்போது அவரிடம் 44 ஆர்.ஆர்-குழுவில் வேலை பார்த்த முன்னாள் வீரர் ஒருவர் படத்தில் தவறுதலான காட்சிகள் இருக்கிறது என்று வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தப் படம் பாதுகாப்புத் துறை அமைச்சரும் மற்றும் ஏ.டி.ஜி.பி.ஐ. ஆகியோரின் ஒப்புதலின் மூலமும் வெளியிடப்பட்டுள்ளது. இராணுவம் தொடர்பான ஒரு படம் எடுக்கிறோம் என்றால் அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல் படத்தை வெளியிட முடியாது. அதற்கான சான்றிதழ் எங்களிடம் இருக்கிறது. அவர்களும் படத்தை பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். யாராக இருந்தாலும் படத்தை பற்றி பேசுபவர்கள், ஒரு தகவலை சொல்ல வரும் முன் அவர்களிடம் இருப்பது சரியான தகவல்களா என்று சரிபார்த்து பேச வேண்டும்.
போல் பஜ்ரங் பாலி கி ஜெய்... என்ற முழக்கம் 44 ஆர்.ஆர்.குழுவுடைய போர் சம்பந்தப்பட்ட ஒன்று. அதை நான் மாற்றி எடுக்க முடியாது. அப்படி மாற்றி எடுத்தால் தான் அது தவறாகிவிடும். என்னுடைய அரசியல் பார்வை, சொந்த கருத்து, இதை சொல்கிற படம் இது கிடையாது. எனக்கும் சில கருத்துக்கள் இருக்கிறது. அதை படத்தின் கதாபாத்திரம் மூலம் திணிக்கக்கூடாது என்பதில் ஒரு இயக்குநரா ரொம்ப தெளிவாக இருக்கிறேன். சமூக பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. அதை கடைபிடிக்கப்பட்டு சரியானதாக படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் அந்த முன்னாள் இராணுவ வீரர் சொல்வது தவறான தகவல் என நினைக்கிறேன்” என்றார்.