தமிழ்த் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கும், ரஜினிகாந்த் தனது 73வது பிறந்தநாளைக் நேற்று கொண்டாடினார். அவருக்கு தமிழ்த் திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு நபர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் தொடங்கி ஆளுநர் ரவி உட்பட ஏராளமானோர் ரஜினிக்கு அவர்களது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே அவரது ரசிகர்கள் கள்ளக்குறிச்சியில், ஓவிய ஆசிரியர் செல்வம் என்பவர் பாட்ஷா பட பாணியில் கைகளை கம்பத்தில் கட்டிக்கொண்டு வாயால் ரஜினிகாந்த்தின் ஓவியத்தை வரைந்தது, புதுச்சேரியில் மணக்குள விநாயகர் தேரை இழுத்து சிறப்பு வழிபாடு செய்தது, மதுரையில் ஒரு ரசிகர் அவரது வீட்டில் ரஜினிக்கு சிலை வைத்துள்ள நிலையில் அதற்கு பால் அபிஷேகம் செய்தது என கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் ரஜினி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ரஜினி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது தொடர்பாக நன்றி தெரிவித்துள்ளார். அதில், “எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த ஆளுநர் ரவி-க்கும், இனிய நண்பர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.