கடந்த 9ஆம் தேதி இமயமலை சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஜினி, ரிஷி கேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்குச் சென்று சாமியார்களைச் சந்தித்தார். அங்குள்ள தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். இதைத் தொடர்ந்து பத்ரிநாத் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் உத்தரகாண்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்டார். இதையடுத்து, துவாரஹட்டில் உள்ள பாபாஜி குகைக்கு சென்றார்.
இதையடுத்து இமயமலை பயணத்திலிருந்து திரும்பிய அவர், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினார். அங்குள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்குச் சென்று வழிபட்டதற்கு இடையே ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்தில் துறவிகளைச் சந்தித்தார்.
இதையடுத்து லக்னோ சென்ற ரஜினிகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்து ஜெயிலர் படம் பார்க்கவுள்ளதாகத் தெரிவித்தார். இன்று மதியம் 01:30 மணிக்கு படம் திரையிடப்படுவதாக சொல்லப்படுகிறது.
கடந்த 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ரூ.400 கோடி வசூலை நெருங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. நெல்சன் இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தன. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.