சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜெயிலர். இந்தப் படத்தில் முன்னணி நடிகர்களான மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதையொட்டி நடந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசுகையில், "படத்தில் வரும் ஹூக்கும் பாடல் என்னுடைய ரசிகர்களுக்காக பண்ணனும் என்று சொன்னார்கள். 2 வருஷம் ஆச்சு, அதனால் ரசிகர்களுக்கு ஒரு உற்சாகம் தர வேண்டும் என்றார்கள். தாறுமாறாக இருந்தது. உடனே நான், சூப்பர் ஸ்டார் எல்லாம் வருது அதையெல்லாம் எடுத்துருங்க. அது வேண்டாம். இப்போ எதுக்கு இது என்றேன். அது இருந்தாலே தொல்லை தான். 77களில் தாணு, சூப்பர் ஸ்டார் என சொன்னவுடன், தயவு செய்து வேண்டாம் என சொன்னேன். அதற்கு, சில பேர் ரஜினி பயந்துட்டாரு, பயந்து நடுங்கிட்டாரு. அய்யய்யோ... சூப்பர் ஸ்டார்லாம் வேண்டாம் என சொல்லிவிட்டதாக பேசினாங்க. நன் பயப்படுவதற்கு இரண்டே ஆட்களுக்கு தான். ஒன்னு கடவுள். இன்னொன்னு நல்லவங்க.
நல்லவங்க மனச எப்போதும் நோகடிக்கக்கூடாது. அவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தக் கூடாது. ஏனென்றால் நல்லவர்களின் சாபம் பலிச்சுடும். இவங்க ரெண்டு பேருக்கு மட்டும் தானே தவிர வேறெதுக்கும் இல்லை. ஏன் அந்த பட்டம் வேண்டாம் என்று சொன்னேன் என்றால், 77களில் சிவாஜி சார் இன்னும் ஹீரோவாக நடிச்சிக்கிட்டு இருக்கிறார். கமல்ஹாசன் உச்சத்துல இருக்கிறார். நான் சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அவங்க என்னா நினைப்பாங்க. அவர்களுக்கு கொடுக்கிற மரியாதை. கௌரவம். அதுக்காக சொன்னேனே தவிர பயந்தது கிடையாது.
அப்போது எதிர்ப்பு, வெறுப்பு இருந்தது. அது எல்லாருக்குமே எல்லா இடத்துலயும் இருக்கும். ஆனால் எனக்கு வந்த எதிர்ப்பு, வெறுப்பு எல்லாம் சுனாமி மாதிரி. அது எல்லாம் இந்த 20 கிட்ஸ்களுக்கு தெரியாது. 70ஸ்ல இவ்ளோ ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் கிடையாது. அதனால் வெளியே தெரியவில்லை. அந்த வெறுப்பு, எதிர்ப்பு அதிலிருந்து வந்த நெருப்பு. அந்த நெருப்பிலிருந்து வளர்ந்த செடி இந்த ரஜினிகாந்த். அந்த செடியை காப்பாத்தினது கடவுள், உழைப்பு. அதனால் நான் சம்பாதித்த என்னுடைய ரசிகர்கள் புயல் மாதிரி இரும்புக் கோட்டை போல் இருந்தார்கள். சிகரெட் பிடிச்சுக்கிட்டு ஆக்ஷன் பண்ணிக்கிட்டு இருந்த ரஜினி, ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி இந்த படங்களை தொடர்ந்து தாய்க்குலம் ரிலீஸானது. அந்த படம் தியேட்டருக்கு வருவது யானை கரும்பு தோட்டத்துக்குள்ள புகுந்த மாதிரி. இருந்தாலும் அந்த நெருப்பு இன்னும் ஆறவில்லை, புகைஞ்சுகிட்டே இருக்கு.
அந்த வெறுப்பு, எதிர்ப்பு என்பது விலங்குகளில் குரங்கு ரொம்ப குறும்பு. அதே போல் பறவைகளில் காக்கா. ஆனால் இந்த கழுகு, உயர பறக்கும். எப்போதாவது கீழே வரும். அப்போது காக்கா, புறா, குருவி என சின்ன சின்ன விலங்குகளை எல்லாம் கொத்திக்கிட்டே இருக்கும். உடனே காக்கா கழுகை பார்க்குது. அது எவ்ளோ வேகமாக சிறகடித்தாலும் கழுகு அளவுக்கு உயரே பறக்க முடியாது. ஆனால் கழுகு இறக்கையை சிறகடிக்காமல் அப்படியே மெதந்துட்டு போய்கிட்டு இருக்கும். காக்கா பொறாமையால், கழுகை கொத்தும். கழுகு ஒன்னும் பண்ணாது. இன்னும் கொஞ்சம் மேலே போகும். காக்காவும் விடாது. அப்போ கழுகு இன்னும் மேலே போகும். காக்காவால் மேலே போக முடியாது. டையர்டு ஆகி வேர்த்து விறுவிறுத்து கீழே வந்துவிடும். அதனால் நம்மை யாராவது வெறுக்கிறார்கள் எதிர்க்கிறார்கள் என்றால் நம்ம உழைப்பால் உயர்ந்த மொழியான மௌனத்தில் பதிலளிக்க வேண்டும்.
நான் காக்கா, கழுகு என சொன்னது நம்ம சமூக வலைத்தளங்களில் இவரை காக்கா என சொல்லிவிட்டார், இவரை கழுகு என சொல்லிவிட்டார் என்று கிளப்பிவிடாதீங்க. யதார்த்தத்தை நான் எவ்ளோ சொன்னாலும் விடப்போறதில்லை. குரைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. ஆக மொத்தத்தில் இந்த ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. தமிழ்நாடு என்ன விதிவிலக்கா. நம்ம வேலையை நம்ம பாத்துகிட்டு போய்கிட்டே இருக்கணும். புரிஞ்சிதா ராஜா" என்றார்.