கரோனா ஊரடங்கினால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊருக்குத் திரும்பி வரும் நிலையில், இதற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து நடிகர் ராகவா லாரன்ஸ் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...
''நமது முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களுக்கு என் நன்றிகள். கரோனா நெருக்கடியால் பல நாட்களாக உணவு, இருப்பிடம் இல்லாமல் சென்னையில் சிக்கியிருக்கும் ஆந்திராவை சேர்ந்த 37 பேர் வீடு திரும்ப போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். எனது கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஏற்றார். அவரது செயலாளர் விஜயகுமார் என்னை தொலைபேசியில் அழைத்து எனது கோரிக்கை பற்றி கேட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்தார். ஒரு வாரத்துக்குள் 37 பேருக்குமான போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் ரயிலில் வீடு திரும்பிவிட்டனர். எனது கோரிக்கையின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த நமது முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, அவரது செயலாளர் விஜயகுமார், ஆட்சியர் ஜான் லூயி மற்றும் மக்கள் தொடர்பாளர் ராதா கண்ணன் ஆகியோருக்கு என் நன்றிகள் நமது முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்க ராகவேந்திர சுவாமியை வேண்டுகிறேன். சேவையே கடவுள்" என கூறியுள்ளார்.