உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பல துறைகள் முடங்கியிருப்பதைப் போல சினிமாத்துறையும் முடங்கியுள்ளது. அதனால் அத்துறையில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாகப் பல சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த நிவாரண நிதி அல்லது பொருட்களைக் கொடுத்து உதவி வருகின்றனர்.
இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் பல்வேறு விதமாக மக்களுக்கு உதவி வருகிறார். சமீபத்தில் திரையுலகப் பிரபலங்கள் மூலமாகப் பொருளுதவிப் பெற்று உதவி செய்யவுள்ளதாக அறிவித்தார். அதற்காக ரஜினி, பார்த்திபன் உள்ளிட்டோர் உதவிகள் செய்தனர்.
தற்போது இந்த உதவி குறித்து லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் இப்போது ஒரு புதிய முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கிறேன். தாய் அமைப்புக்காக பார்த்திபன் சார் 1,000 கிலோ அரிசி அனுப்பியது குறித்து நீங்கள் அறிவீர்கள். அதிலிருந்து 500 கிலோ அரிசி கீழே குறிப்பிடப்பட்டுள்ள படித்துக் கொண்டே பணிபுரியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் தேவையுள்ள மக்களுக்கு விநியோகம் செய்வார்கள். அவர்களிடம் ஒப்படைப்பதில் ஒரு ஸ்பெஷலான காரணம் உள்ளது.
அவர்கள் சிறப்பாகச் சமூக சேவை செய்து வருவதாக நான் அறிந்தேன். இந்த இளைஞர்களை ஊக்கப்படுத்துவது மிகவும் முக்கியம், இதனால் அவர்கள் இன்னும் சிறப்பாகப் பணியாற்றுவார்கள். எனவே தனிப்பட்ட முறையில் அவர்களின் வங்கிக் கணக்குக்கு 25,000 ரூபாயை அவர்களுடைய செலவினங்களுக்காகவும். உணவுப் பொருட்கள் வழங்கவும் அனுப்பவுள்ளேன்.
அவர்கள் நினைத்திருந்தால் கேம் விளையாடிக்கொண்டும், சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டும் இருந்திருக்கலாம், ஆனால் அவர்கள் அடுத்தவர்களின் வலியை உணர்ந்து அவர்களுக்குச் சேவை செய்ய தீர்மானித்துள்ளார்கள். என்னை விட அவர்களே உயர்ந்தவர்கள். பொதுமக்களுக்குச் சேவை செய்யும் அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன்.
அதனால் தான் இந்த பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்துள்ளேன். அவர்கள் சிறப்பாக இதைச் செய்வார்கள் என்று நம்புகிறேன். சமூகத்துக்கு தங்களால் இயன்ற சேவையைச் செய்யும் ஒவ்வொரு இளைஞரையும் பாராட்ட வேண்டியது அவசியம். சேவையே கடவுள். மாநகராட்சியின் முறையான அனுமதி பெற்று உணவு விநியோகம் செய்யப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.