மலையாளத் திரையுலகில் பாலியல் ரீதியான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதாக வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்திய திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரபல நடிகை ஒருவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பாலியல் கொடுமை அரங்கேறியது. இந்த சம்பவத்தின் விளைவாக படப்பிடிப்பில் ஈடுபடும் நடிகைகள், பெண்கள் என அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது, இந்த குழுவின் ஆய்வறிக்கை அம்மாநில முதல்வரிடம் 2019ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை வெளியாகாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வறிக்கை வெளியானதை தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் நடிகை ஸ்ரீலேகா மித்ரா அளித்த புகாரில் இயக்குநர் ரஞ்சித் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் ரஞ்சித் குற்றத்தை மறுத்து, தனது மலையாள சினிமா அகடாமி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியிருந்தார். நடிகை ரேவதி சம்பத் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான் ஆகியோர் மீது அளித்த புகாரில் சித்திக் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் இருவரும் குற்றத்தை மறுக்க, சித்திக் தனது நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார். நடிகை மினுமுனீர் அளித்த புகாரில் நடிகர்கள் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு நடிகை புகார் கொடுத்ததால் அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பாலியல் புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்ததால் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் மோகன்லால் உட்பட 17 செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்தனர். மேலும் அம்மா அமைப்பை கலைத்தனர்.
இந்த பாலியல் புகார்கள் தொடர்பாக அம்மாநில அரசு சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் புகார் கூறிய நடிகைகளிடம் வாக்குமூலம் பெற்று சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறது. இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் ஒரு வாரத்திற்குள் ஹேமா கமிட்டி ஆய்வறிக்கையின் முழு வடிவத்தையும் வழங்கக் கோரி கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகைகள் பாலியல் புகார்கள் குறித்து ராதிகா சரத்குமார் தற்போது பேசியுள்ளார். அவர் பேசுகையில், பாலியல் துன்புறுத்தல் மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் நடக்கிறது என்றும் கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகள் உடை மாற்றுவதை படம்பிடித்து வந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், “நான் மோகன்லாலிடம் பேசினேன். நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டால் அதை உடனே வெளியில் தெரிவிக்கும்படி, பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்றேன். ஒரு நடிகை காவல்துறையை அணுகும் போதும் எவ்வளவு கேள்விகள் வரும், அது அந்த நடிகை மீது இன்னும் பாரத்தை கொடுக்கும். பெண்களுக்காக நிறைய விஷயங்களை நாம் தான் சரி செய்து கொடுக்க வேண்டும். நிர்பயா வழக்கு 8 வருஷமாக நடந்தது.
பிரதமர் மோடியும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு விரைந்து முடிவு கொண்டு வர வேண்டும் என சொல்லியிருக்கிறார். அது ஒரு நல்ல முன்னெடுப்பு. முதலில் அனைத்து பெண்களும் தைரியத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் காலகட்டம் வேறு. இப்போது நான் கேரவானில் ரகசிய கேமரா வைப்பது குறித்து சொல்லியிருக்கும் விஷயம் ஏன் அப்போதே சொல்லவில்லை என்றால் அப்போதே சம்மந்தப்பட்டவர்களை கேள்விக்கேட்டுவிட்டேன். இனிமேல் இது நடக்காது என நம்புகிறேன்” என்றார்.