மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்க, ஹரி உத்ரா இயக்கத்தில், சிவநிஷாந்த், ஆன்டனி, அய்ரா, திவ்யா உள்ளிட்டோர் நடிக்கும் படம், கல்தா. கேரள மாநிலத்தில் இருந்து, மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து, தமிழக எல்லைக்குள் கொட்டுவது பெரும் சிக்கலாக இருக்கிறது. இந்த படத்தின் கதை கருவும் இதுதான். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “மக்கள், தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் எதற்காக அரசியல்வாதிகள் வோட்டு போட இரண்டாயிரம் ரூபாய் தருகிறார்கள் என்றும், எதற்காக இலவசம் தருகிறார்கள் என்றெல்லாம் யோசிக்க வேண்டும். உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை, ஏன் வோட்டுக்கு காசு தருகிறாய் என்று மக்கள் யோசிக்க வேண்டும். அப்படி நீங்கள் எல்லாம் யோசித்தீர்கள் என்றால் படத்தில் வருவதுபோன்று குப்பைகளை கொட்டாமல் பார்த்துக்கொள்ளலாம். அதற்காகதான் மக்கள் இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை உருவாக்குகிறார்கள் என்று சொன்னேன்.
சும்மா அரசியல்வாதி, அரசியல்வாதி என்று காரணம் சொல்கின்றனர். பாவம், அரசியல்வாதிகள் படுகின்ற கஷ்டம் நமக்குதான் தெரியும். அரசியல்வாதிகள் கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள் என்று நாம் சொல்கிறோம். இதோ கட்சி மாறினார் ராதாரவி பாஜகவில் நல்லா சம்பாதிக்கிறார் என்று பல விஷயங்கள் சொல்கிறார்கள்.
போயும் போயும் பாஜக பணம் தருவார்கள் என்று சொல்லலாமா? நான் மேடையிலேயே சொல்கிறேன், ஏன் அவர்களிடமே சொல்லியிருக்கிறேன். பணம் தரும் கட்சியா அது? வெறும் தேங்காய் மூடி கச்சேரிதான். அவர்களுடைய எண்ணம் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். அதனால் அனைத்து அரசியல்வாதிகளும் பணம் வாங்கிக்கொண்டு சந்தோசமாக இல்லை, சிரமப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஒருசிலர் இருக்கிறார்கள் பணக்காரர்களாக மாறி மல்டி மில்லியனர்ஸா இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் அலெக்ஸாண்டர் வெறும் கையை தொங்கப்போட்டு போனதுபோலதான் போக வேண்டும்” என்றார்.