நயன்தாரா மற்றும் நடிகைகள் குறித்து சர்ச்சையாக கருத்து தெரிவித்த ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
கொலையுதிர் காலம் என்னும் திரைப்பட டிரைலர் வெளீயிட்டு விழாவில் கலந்துகொண்ட ராதாரவி நயன்தாரா மற்றும் நடிகைகளை அவதூறாக பேசினார். இவ்வாறு ராதாரவி பேசியதை அடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிர்ப்பு கூடியது. சின்மயி, விக்னேஷ் சிவன், விஷால் உள்ளிட்ட பலர் அவருக்கு கண்டனத்தை தெரிவித்தனர். #BanRadhaRavi என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி அவர் இனி சினிமாக்களில் நடிக்க கூடாது என்றும் பலர் பதிவிட்டு வந்தனர்.
விக்னேஷ் சிவன் ராதாரவி மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு ட்விட்டரில் வலியுறுத்தினார். இதனையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கழக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். வெளியான அறிக்கையில் ‘நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.