
கமல்ஹாசன், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், விருமாண்டி எனப் பல ஹிட் படங்களைத் தயாரித்துள்ளது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தை தயாரித்திருந்தது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும் நூறு நாட்கள் மேல் திரையரங்கில் ஓடியது. இதையடுத்து கமல் நடித்து மணிரத்னம் இயக்கி ஜூன் 5 வெளியாகவுள்ள ‘தக் லைஃப்’ படத்தை தயாரித்து வழங்குகிறது. அடுத்து கமல் நடிப்பில் அன்பறிவ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தையும் தயாரிக்கிறது. இடையே சிம்பு - தேசிங் பெரியசாமி படத்தை தயாரிக்கவிருந்தது. பின்பு சில காரணங்களால் விலகிவிட்டது.
இந்த நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் பெயரில் மோசடி நடக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அந்த அறிக்கையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
pic.twitter.com/jGa3JGKjkI— Raaj Kamal Films International (@RKFI) March 29, 2025