புஷ்பா வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா 2 தி ரூல்’ நேற்று (05.12.2024) பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்க பின்னணி இசையில் சாம் சி.எஸ் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இப்படத்தின் முன்பதிவு மட்டுமே ரூ.100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவெற்பு பெற்று வருகிறது. முதல் நாளில் இந்தி பதிப்பு மட்டும் ரூ.72 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் உலகம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் முதல் நாள் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 294 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் உலகளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த இந்திய திரைப்பட பட்டியலில் புஷ்பா 2 முதல் இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்பாக ஆர்.ஆர்.ஆர். படம் ரூ.223 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.