தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு திருவிழா போல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறப்பு காட்சிகளில் ரசிகர்கள் வெடி வெடித்து, பேனர் மற்றும் போஸ்டர்கள் அடித்து, கேக் வெட்டி, மேளதாளத்துடன் படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்கின்றனர். அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படத்திற்கு, முதல் நாள், நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. அப்போது லாரியின் மீது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன் பிறகு வெளியான எந்த படத்திற்கும் அதிகாலை மற்றும் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் விஜய் நடிப்பில் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ள லியோ படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் கடைசி காட்சி முடிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரபல நடிகர்களின் ரசிகர் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், புதிய பட ட்ரைலர் வெளியிடும் திரையரங்கில் ரசிகர்கள் பொதுமக்கள் பாதுகாப்புக்கு விதிகள் வகுக்க வேண்டும். ரசிகர் காட்சிகளில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களால் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மேலும் ரசிகர்களை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது