Skip to main content

'எல்லை மீறிச் சென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்'- தயாரிப்பாளர் டி.சிவா

Published on 15/07/2019 | Edited on 15/07/2019

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா , படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதிரத்னம், சுந்தர்ராம், இசையமைப்பாளர் திவாகரா தியாகராஜன், கலை இயக்குநர் சூர்யா, படத்தொகுப்பாளர் வேல்முகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்திரன், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

t siva

 

 

அப்போது விழாவில் கலந்துகொண்ட அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா பேசும்போது, "இது ஒரு நம்பிக்கை தரும் பட முயற்சி என்று சொல்லலாம். குறும்படத்திலிருந்து நிறைய நம்பிக்கையானவர்கள் வருகிறார்கள். தெலுங்கில் எப்படி விஜய் தேவர்கொண்டா ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்தாரோ அதே போல் துருவா அவர்களுக்கும் ‘சூப்பர் டூப்பர்’ பெரிய வெற்றி படமாக அமையும். பார்ப்பதற்கு அவரைப் போலவே இருக்கிறார் என்று பாராட்டினார். சூப்பர் டூப்பர் ட்ரைலரை பார்க்கும் போது இது ஒரு மாஸ் கமர்சியல் படங்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கிறது. நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். ஊடகங்களில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதனால் இந்த விளக்கம் தர வேண்டி உள்ளது. தயாரிப்பாளர்கள் விமர்சனத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன். ஒருபோதும் தயாரிப்பாளர்கள் விமர்சனங்களை எதிர்ப்பதில்லை. தரக்குறைவான விமர்சனங்களைத்தான் எதிர்க்கிறோம். மோசமாக விமர்சனம் செய்த படங்களும் ஓடி இருக்கின்றன. விமர்சனங்கள் நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும். அதற்கு வரம்பு உண்டு. அந்த எல்லை மீறிப் போகக்கூடாது. “என்ன படம் எடுத்திருக்கிறார்? தியேட்டருக்குப் போகாதீர்கள்” என்று எல்லாம் கேவலமாகப் பேசக் கூடாது. தி.நகரில் ஒரு கடை வாசலில் நின்று கொண்டு “அந்த கடையில் பொருள் வாங்காதே, எதுவும் எடுக்காதே” என்று கூறினால் அவர் அந்த நேரம் எந்தச் சட்டை போட்டு இருந்தாலும் அதைக் கிழித்து விடுவார்கள். சினிமா அவ்வளவு தூரம் கேட்பாரற்ற தொழில் அல்ல. படத்தின் முடிவு என்ன என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கட்டும். முதல் நாள் முதல் ஷோவே வெற்றி பெறுவதில்லை. அவன் பார்க்க அவகாசம் கொடுங்கள். விமர்சனங்களால் ஓடிய படம் நிறைய உண்டு. நல்ல விமர்சனங்களால் ஓடாத படங்களும் உண்டு. விமர்சனம் என்கிற பெயரில் சிலர் செய்யும் இந்த செயல்களால் வருத்தப்படுகிறோம். இது எல்லை மீறிச் சென்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கிறோம்" என்றார்.

சார்ந்த செய்திகள்