
அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணை கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்த திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தார். மேலும் விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில்.... “சென்னை சிட்டியை தாண்டி பாடியில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த திரையரங்கை அமைத்திருப்பது அவர்கள் சினிமாத்துறையின் மீது வைத்துள்ள அபிமானத்தை காட்டுகிறது.திரையுலகம் மோசமான சூழலில் சிக்கித் தவிக்கும் இந்த நிலையில், மக்களை மகிழ்விக்கும் நல்ல நோக்கத்தோடு இவர்கள் வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. படித்த மக்கள் விரும்பும் வகையில், அவர்களின் ரசனைக்கேற்றவாறு ஒளி, ஒலி அமைப்புகளை அமைத்திருக்கிறார்கள். சினிமாத்துறை நடத்தும் வேலை நிறுத்தத்தால் ஃபெப்ஸி தொழிலாளர்கள் உட்பட சினிமாவை நம்பி இருக்கும் 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள்.இவர்களை தவிர்த்து திரையரங்கை மூடுவதால் ஒவ்வொரு திரையரங்கிலும் 50 பேர் வீதம் அதில் பணி புரியும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு முழுக்க 1100 திரையரங்குகள் உள்ளன.மக்கள் திரையரங்குகளுக்கு வருவதற்கு கட்டண குறைப்பு செய்ய வேண்டிய அவசியம் கூட இல்லை. ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ரத்து செய்தாலே அனைத்து தரப்புக்கும் அது சாதகமாக அமையும்.நடிகர்கள் சம்பளத்தை குறைத்தாலே பாதி பிரச்சினை முடியும். இன்னும் பத்து நாட்களில் இந்த நிலை சீராக வேண்டும். சினிமா தொழில் வழக்கம் போல நடக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்றார்.