ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் அமீர் கானின் 'தங்கல்', இரண்டாவது இடத்தில் ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி 2' படங்கள் உள்ளன.
இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 'நாட்டு நாட்டு' பாடல் பலரது கவனத்தை ஈர்த்து திரைத்துறையில் உயரிய விருதுகளாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. இதனால் உலக அளவில் கவனம் பெற்ற இப்பாடலை பலரும் நடனமாடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே அண்மையில் ஆஸ்கர் விருதிற்காக ரூ.80 கோடி வரை விளம்பரம் செய்ததாகவும் விழாவில் கலந்துகொள்ள இலவச டிக்கெட் வழங்கப்படாத சூழலில் ஒருவருக்கு ரூ.20 லட்சம் செலவு செய்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த பேச்சுக்கள் குறித்து ஆர்.ஆர்.ஆர் படத்தின் தயாரிப்பாளர் டிவிவி தானையா ஒரு பேட்டியில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஆஸ்கர் விளம்பரத்திற்காக நான் எந்தப் பணத்தையும் செலவழிக்கவில்லை. அது பற்றி என்ன நடந்தது என்பது எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஒரு விருது விழாவிற்கு யாரும் 80 கோடி ரூபாய் செலவு செய்யமாட்டார்கள். இதில் எந்த லாபமும் இருக்காது" என்றார்.
ஆஸ்கர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என படத்தின் தயாரிப்பாளர் கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் ராஜமௌலி தனிப்பட்ட முறையில் கோடி கணக்கில் ஆஸ்கருக்காக விளம்பரம் செய்ததாக ஒரு தகவல் சுற்றி வருகிறது. மேலும் ப்ரோமோஷனில் தயாரிப்பாளர் பெயரை பெரிதளவு ராஜமௌலி குறிப்பிடவில்லை என மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.