தமிழில் விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, பின்பு பாலிவுட்டில் கவனம் செலுத்தி அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நடிப்பது மட்டுமில்லாமல் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அதோடு மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். இதனிடையே கடந்த 2018ஆம் ஆண்டு நிக் ஜோன்ஸ் எனும் பாப் பாடகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மால்டி மேரி சோப்ரா ஜோனாஸ் என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில் பிரியங்கா சோப்ராவிடம் ஒரு பேட்டியில், 'உலகின் பிரபலமான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது எப்படி இருக்கிறது' என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவது ஒரு சிறந்த நடிகராக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தது. நான் அப்படித்தான் கற்றுக்கொண்டேன்.
சினிமாவில் நடிகர்களின் வேலை மிகக் குறைவு. யாரோ ஒருவர் எழுதிய வசனங்களைப் பேசுகிறோம். நாங்கள் உதட்டை ஒத்திசைத்து மற்றொருவரின் குரலில் பாடல்களைப் பாடுகிறோம். வேறொருவர் சொல்லிக் கொடுக்கிற ஸ்டெப்பை நடனமாடுகிறோம். இது மட்டுமே செய்கிறோம். அதனால் நான் எப்போதும் சொல்வேன் நடிகர்கள் எதுவும் செய்வதில்லை. அதனால் அவர்களை ஏன் முக்கியத்துவம் கொடுத்துப் புகழ வேண்டும்" என்றார்.