பிரித்விராஜ் தற்போது மோகன்லாலை வைத்து லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எல்2: எம்புரான் படத்தை இயக்கி வருகிறார். இதன் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக அறிவித்திருந்தார். இதனிடையே அவர் நடிப்பில் 'விலயாத் புத்தா' படம் உருவாகி வருகிறது. மேலும் விபின் தாஸ் இயக்கும் 'குருவாயூர் அம்பல நடையில்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதனிடையே தேசிய விருது இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் ‘ஆடு ஜீவிதம்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஆடு மேய்க்கும் தொழிலாளியாகச் சேர்கிறார். அவரது வாழ்க்கையை சொல்லும் கதையாக அந்த நாவல் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 6 வருடங்களாக நடைபெற்றது. இடையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கே.ஆர். கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பின்பு மார்ச் 28 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. தமிழில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியது. இசை வெளியீட்டு விழாவும் நடந்து முடிந்துள்ளது. இப்போது புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், பிரித்விராஜ் இப்படத்திற்காக நான்கு மொழிகளில் டப்பிங் பேசி முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி டப்பிங் முடிந்தது. இந்த முழு கதாபாத்திரத்தையும் மீண்டும் ஒரு முறை வாழ்ந்திருக்கிறேன். பின்னர் அதை 4 வெவ்வேறு மொழிகளில் மீண்டும் 4 முறை பார்த்திருக்கிறேன். எபிக் திரைப்படம் இது. நஜீப்பின் நம்ப முடியாத உண்மை கதையைக் காணத் தயாராகுங்கள்” எனக் கூறியுள்ளார். இவரது பதிவு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.