40 வருடங்களுக்கு மேலாக சினிமாதுறையில் பணியாற்றி வரும் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோவில் தனக்கென ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் இசையமைப்பது வழக்கம். இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திற்கும் இளையராஜாவிற்கும் அவர் பணிபுரிந்து வந்த இடம் சம்பந்தமாக கடந்த வருடம் பிரச்சனை எழுந்தது.
இதனையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து இளையராஜா வெளியேறினார். இது தொடர்பாக பாரதிராஜா தலைமையில் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,'பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள என் அலுவலகத்தில் இசைக்குறிப்புகள், இசைக் கருவிகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் இருந்தன. அதில் சில பொருட்கள் விலை மதிப்பு மிக்கது.
சாய் பிரசாத் அவரது ஆட்கள் மூலம் என்னுடைய பொருட்களை நீக்கியும், சேதாராப்படுத்தியும் உள்ளார் என்று எனக்கு நெருங்கிய வட்டாரங்கள் மூலம் எனக்கு தகவல் கிடைத்தது. அவை கோடிக்கணக்கான விலைமதிப்பு கொண்டவை. அவர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் குறித்து நாளை பிரசாத் ஸ்டுடியோவில் நேரில் விசாரணை நடத்த சென்னை மாநகர காவல் திட்டமிட்டுள்ளது. இளையராஜாவுக்கு ஒதுக்கப்பட்ட பிரத்யேக அறையிலும் சோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.