திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஆகஸ்ட் மாதம், வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் உரிய அனுமதியின்றி இடத்தை ஆக்கிரமித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. பிரகாஷ் ராஜ், தனது பெயரில் உள்ள 7 ஏக்கர் நிலம் அல்லது அதற்கருகில் உள்ள சதுப்புநிலத்தை ஆக்கிரமித்ததாக அக்கூட்டத்தில் புகார் எழுந்தது. மேலும் பாபி சிம்ஹா, அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மாடிக் கட்டிடம் கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு பிரகாஷ் ராஜ், அஞ்சுவீடு பகுதியில் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. பாபி சிம்ஹாவும் ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றி விட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஒப்பந்ததாரர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.
இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில், பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதிமுறைகளை பின்பற்றாமல், அரசின் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டி வருகின்றனர்” என குறிப்பிட்டிருந்தது. மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்பு வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.