சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணனாமலை மன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவினை சிறப்பிக்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் கலைஞரின் வரலாற்று புகைப்பட கண்காட்சி இடம்பெற்றுள்ளது. அதை நடிகர் பிரகாஷ் ராஜ் திறந்து வைத்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அற்புதமான ஆவணப்படம். எனக்கு பேச்சே வரவில்லை. மனசு 30 ஆண்டுகாலத்துக்கு பின்னாடி போகுது. கலைஞரைப் பற்றிய பாசமும், அவரது கொள்கையைப் பற்றிய புரிதலையும் உள்வாங்கியவர்களால் மட்டும் தான் இது போன்ற பதிவை பதிவு செய்ய முடியும். இருவர் படம் நடிச்சு 28 வருஷம் ஆச்சு.
இன்றைய தொழில்நுட்பத்தில் கலைஞருடைய நியாபகங்களை, அவருடைய பேச்சுக்களை மீண்டும் கேட்பது மாதிரி பதிவு, அற்புதமான ஒன்று. அவராக நடிக்க இருவர் படத்துல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது மகிழ்ச்சி. அவரை சந்திப்பதற்கு முன்னாடி அவரை மாதிரி வாழ்ந்தது போல் ஒரு ஃபீல். கிட்டதட்ட இரண்டு வருஷம் அவரைப் பற்றி படிச்சேன். நான் கர்நாடகாவிலிருந்து வந்தவன். அதனால் அவருடைய அந்த தமிழ் உச்சரிப்பு கத்துக் வேண்டும். அந்த தமிழை கத்துக்க கத்துக்க, அந்த மொழியுடைய கர்வத்துல அவருடைய அற்புதமான கொள்கைகளும், அவருடைய வாழ்க்கையின் பயணங்களும் என்னால் உணர முடிஞ்சது.
ஏனென்றால் அந்த கதாபாத்திரத்தை ஒரு நடிகராக மட்டும் நடிக்க முடியாது. அந்த படத்தில் நடித்ததை விட இப்படியொரு மகானை நான் சந்திக்க நேர்ந்தது மிக முக்கியம். இன்றைக்கு நான் இப்படி பேசுவதற்கு காரணம் அப்படியொரு மனிதனை இரண்டு ஆண்டுகள் படித்தது தான் காரணம். சமீபத்தில் சாதி அரசியல் உள்ளிட்ட நிறைய அரசியல் குறித்து ஒரு பேட்டியில் பேசினேன். அப்போது நீங்க அதை பத்தி ரொம்ப பேசுறீங்கன்னு சொன்னாங்க, கலைஞர் இருந்திருந்தால் நான் பேச வேண்டிய அவசியமே இருந்திருக்காது என்றேன். அவர் இருக்குற வரைக்கும் எவனும் இங்க வாலாட்ட முடியல. கலைஞருடைய நூற்றாண்டு விழா கொண்டாடிட்டு இருக்கிற நாட்டுல ஒரு நூற்றாண்டின் கலைஞரை கொண்டாடிட்டு இருக்கீங்கன்னு நம்புறேன். அவர் சினிமாவில் நல்ல டயலாக் எழுதினாரு என்பதை விட அப்போதே 69 சதவிகிதம் இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது தான் முக்கியம். அடுத்த தலைமுறைக்கு கலைஞர் இருந்தார் என்ற செய்தியை விட ஏன் கலைஞர் ஆனார், அவரது வாழ்வியல் எப்படி இருந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தண்டவாளத்தில் தலையை கொண்டு வைத்திருக்கிறார் என்றால் எப்படியொரு நெருப்பு அவரிடம் இருந்திருக்கும். அதை மறக்கவே முடியாது. அபியும் நானும் பட ஆடியோ லாஞ்சுக்கு ஒரு நாள் முன்னாடிதான் ஃபோன் போட்டு சொன்னேன். உடனே வந்துவிட்டார். இலக்கியம், கொள்கை உள்ளிட்டவைகளை பேசுவார். நான் இரண்டு வருஷம் படித்ததை விட நிறைய விஷயங்கள் இந்த புகைப்பட கண்காட்சியில் பதிவு செய்யபட்டிருக்கு. கொள்கையை வைத்து ஒரு தலைவரானதும், மக்களின் அன்பை இன்றைக்கும் அவர் சம்பாதித்தது, ஒரு உண்மையான தலைவனுக்கான விஷயம். எங்களுக்கு அவர் வழிகட்டியாக இருக்கிறார். கலைஞரின் கொள்கை வழியில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அது இன்னும் உயரும். எதையும் எதிர்த்து நிற்கும் துணிச்சல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. ஒரு முதல்வரே அப்படி நிற்கும் போதுதான் மக்களுக்கு ஒரு நம்பிக்கை வரும், நான் எங்கு சென்றாலும் எனக்கு வீடு (தமிழ்நாடு) இருக்கிறது என்று சொல்ல நம்பிக்கை இருக்கிறது. என் செல்லத்த ஒன்னும் பண்ண முடியாது. கலைஞருடைய சிந்தனை தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருக்கிறது. நிறைய ஷூட்டிங்கில் மக்கள் வருவார்கள். கன்னியாகுமரி ஷூட்டிங்கில் மோடியே ஆடியன்ஸை கூட்டிட்டு போறார். .” என்றார்.