2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.
அந்த வகையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறவுள்ளதாக பிரதமர் மோடி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் பா.ஜ.க. பெயரை குறிப்பிடாமல் 420 செய்தவர்கள் தான், 400 சீட்களைப் பற்றி பேசுவார்கள் என விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் உள்ள சிக்கமங்களூர் பிரஸ் கிளப்பில் பேசிய அவர், “420 மோசடி பேர்வழிகள் தான் 400 சீட்களைப் பற்றி பேசுவார்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, அது உங்களின் ஆணவத்தைப் பிரதிபலிக்கிறது. ஜனநாயக நாட்டில் ஒரு கட்சி 400 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை வெல்ல வாய்ப்பே இல்லை. மக்கள் ஆதரவு கொடுத்தால் மட்டுமே அப்படி வெல்ல முடியும். எந்த ஒரு அரசியல் கட்சியும் தாங்களாகவே முன் வந்து, இவ்வளவு தொகுதிகளில் எங்களால் வெல்ல முடியும் என சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அதற்கு பெயர் ஆணவம்” என்றார்.