'மைனா', 'கும்கி', 'கயல்' உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமடைந்த பிரபுசாலமன், தற்போது 'செம்பி' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் அஷ்வின், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், பிரபுசாலமனை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் 'செம்பி' படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
"செம்பி என்னுடைய மனதிற்கு நெருக்கமான படமாக இருக்கும். இந்தப் படத்தின் கதையைச் சொல்ல முடியாது. ஏனென்றால் கதையைக் காட்டியிருக்கிறோம். படத்தில் பேருந்து ஒரு கதாபாத்திரமாக இருக்கும். வாழ்க்கை என்பது ஒரு பயணம் என்பதை இந்தப் படம் அழுத்தமாக பேசும். படத்தில் கோவை சரளா மலைவாழ் மூதாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க பொருத்தமான ஆளைத்தேடி நிறைய மலைவாழ் பகுதிகளில் மூன்று மாதங்கள்வரை அலைந்தோம். சிலர் தோற்றமாக சரியாக இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நடிப்பு வராது. சிலருக்கு நடிப்புவரும், தோற்றம் பொருத்தமாக இருக்காது. நடிகர்களில் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று யோசித்தபோது மனோரமா ஆச்சி மட்டும்தான் நினைவுக்கு வந்தார். ஆனால், அவர் உயிரோடு இல்லை. சரி, சமகாலத்தில் யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று யோசித்தபோது கோவை சரளா பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.
செம்பி படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தன. காட்டில் தேன் எடுக்கும் காட்சி இருக்கும். அதில் ஒரு ஷாட்டில் பள்ளத்தாக்கை காட்டுவோம். அந்த ஒரு ஷாட் எடுப்பதற்காக மட்டும் ஒருநாள் காத்திருந்தோம். பள்ளத்தாக்கை பனி மூடிவிட்டது. அந்தப் பனி விலகட்டும் என்று நாள் முழுவதும் காத்துக்கொண்டு இருந்தோம். அங்கிருந்த வனத்துறை அதிகாரிகளே இந்நேரத்திற்கு பனி விலகியிருக்கனுமே சார் என்றார்கள். ஒருநாள் காத்திருப்பிற்கு பிறகுதான் அந்த ஷாட்டை எடுத்தோம்.ஆனால், அதை எடுத்த பிறகு ஒருநாள் முழுவதும் வேலை பார்த்த திருப்தி கிடைத்தது. இயற்கையை நம்பிச் செல்லும்போது இது மாதிரி நடப்பது இயல்புதான். அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கக்கூடிய படமாக செம்பி இருக்கும்".