பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு. இதில் நக்கீரன் ஆசிரியர், தயாரிப்பாளர் பிரபாவதி மற்றும் ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன், ஷரத் ஜோதி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
அப்போது தயாரிப்பாளர் மற்றும் இந்த சீரிஸை உருவாக்கியவர்களில் ஒருவரான பிரபாவதி ஆர்.வி. பேசுகையில், “இந்த மேடை எனக்கும் தீரன் ப்ரொடக்ஷன்ஸுக்கும் முக்கியமான ஒன்று. இந்த இடத்திற்கு நான் வர எனக்கு உறுதுணையாக இருந்த அப்பா, அம்மா, நண்பர்கள் எங்கள் நக்கீரன் குடும்பம் ஆகியோருக்கு நன்றி. சின்ன வயதிலிருந்து சில விஷயங்கள் நம்மை பாதிக்கும். ஒரு எமோஷனை கிரியேட் பண்ணும். அப்படி ஒரு விஷயம் நடந்தது.
திடீர்னு ஒருநாள் அப்பா எங்கயோ போறாங்க. வீட்ல அம்மா அழுறாங்க. எல்லாருமே பயத்துடன் இருக்காங்க. ஒரு சாதாரணமான சூழலே இல்லை. முதலமைச்சர் முதல் பெரிய பெரிய ஆட்கள் ஃபோன் பண்றாங்க. என்னம்மா ஆச்சுன்னு அம்மாவிடம் கேட்டபொழுது, அப்பா வீரப்பன்னு ஒருத்தரை பார்க்க போறாருன்னு சொன்னாங்க. யாரு அவருன்னு கேட்டதற்கு, அம்மாவிற்கும் பெரிசாக தெரியவில்லை. ஆனால் ரொம்ப பயங்கரமான ஆளு, யானை, மனுஷங்களையெல்லாம் கொன்னுருக்காருன்னு சொன்னாங்க.
எங்களுக்கு அப்பாவ விட்டா ஒன்னும் கிடையாது. அவருக்கு நக்கீரன் பத்திரிகை, அவருடைய தம்பிகள், அவங்களுடைய குடும்பம் இது அனைத்திற்குமே அப்பாதான் அஸ்திவாரம். இப்படி இருக்கையில், ஏன் அப்பா போறாருன்னு யோசிப்பேன். திடீர்னு வருவாரு. காலில் எல்லாம் அட்டை பூச்சி கடிச்ச தடம் இருக்கும். வலியும் இருக்கும். அதை பார்க்கும் பொழுது நமக்கு கஷ்டமாக இருக்கும். ஒரு நாள் மயிலிறகை நீட்டி இது வீரப்பன் கொடுத்தாருன்னு கொடுத்தார். என்னடா... பயங்கரமான ஆளுன்னு சொல்றாங்க... ஆனா நமக்கு பிடிச்ச மயிலிறகை கொடுத்திருக்கிறாரே... இவர் எப்படிப்பட்ட ஆளு என சின்ன வயதிலிருந்தே எண்ணம் இருக்கும்.
பின்பு நான் காலேஜ் போறேன். நக்கீரன் 25வது ஆண்டு வருது. அதன் வரலாறை டாக்குமெண்ட்ரி பண்ண முடிவெடுத்தேன். அதற்காக காட்டுக்குள் போறேன். அந்த மக்களை சந்தித்து பேசும்பொழுது, இவ்ளோ கஷ்டப்பட்டிருக்காங்களே என அவர்கள் வலியை நினைத்து 3 நாள் தூக்கமே வரவில்லை. அதனால் சின்ன வயதிலிருந்து ஏற்பட்ட பாதிப்புகள், மனதில் ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இதை ஒரு பெரிய ஆவணப் படைப்பாக மக்களிடம் சேர்க்க வேண்டுமென தோனுச்சு. அப்பாவிடம் கேட்டேன். பெரிய பெரிய ஆட்கள் இதை ஆவணப்படுத்த கேட்டபொழுது கூட அப்பா தரவில்லை. சரி நம்ம அப்பாதான, கேட்டவுடனே கொடுத்துருவாங்கன்னு நினைத்தேன். ஆனால் மற்றவர்களை விட எனக்கு நிறைய டெஸ்ட் வச்சாங்க. எக்ஸாம் வைக்காததுதான் பாக்கி.
ஏனென்றால், நக்கீரன் எப்பொழுதும் எளிய மக்களுடைய குரலாக இருந்திருக்கிறது. அப்பா காட்டிற்கு போனது கூட அந்த மலைவாழ் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் தீர்வு கிடைக்குமா என்பதற்காகத்தான். ஒரு ஆவணம், எல்லாத்தையும் சரியாகவும் நேர்மையாகவும் கொண்டு போய் சேர்க்கணும் என்ற நம்பிக்கையை கொடுத்த பிறகுதான் முழு நம்பிக்கையோடு அப்பா கொடுத்தார். அந்த நம்பிக்கைக்காக அப்பாவிற்கு பெரிய நன்றி. அதன் பிறகுதான் தீரன் ப்ரொடக்ஷன்ஸ் ஆரம்பித்தேன். பின்பு தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவிடம் போனேன். எல்லா சந்தேகத்தையும் தீர்த்தார். ரொம்ப சப்போர்ட் பண்ணார். ஜீ குழுமம் இப்போது வரைக்கும் பெரிய சப்போர்ட்டாக இருக்கிறது.
என்னுடைய கனவை அவங்களுடைய கனவாக நினைத்து உறுதுணையாக நடந்துக்கிட்டது ஜெய் மற்றும் வசந்த் அண்ணா. அவங்க இல்லன்னா இந்த ப்ராஜெக்ட் இந்த இடத்தில் இப்படி இல்லை. அவங்க எனக்கு ஒரு பெரிய கிஃப்ட். அப்புறம் இயக்குநர் ஷரத், ஒளிப்பதிவாளர் ராஜ், படத்தொகுப்பாளர் ராம், இசையமைப்பாளர் சதீஷ் என எல்லாருமே அவரவர்களின் உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். என்.ராம் சாரில் தொடங்கி, சீமான், ரோகிணி என அனைவருக்குமே பெரிய நன்றி. படக்குழுவிற்கும் நக்கீரன் டீமிற்கும் ட்ரைலரை வெளியிட்ட சூர்யா மற்றும் சிவகார்த்திகேயன் அண்ணா எல்லாருக்குமே பெரிய நன்றிகள்” என்றார்.