பாலிவுட்டில் பிரபல நடிகையாகவும் மாடலாகவும் வலம் வருபவர் பூனம் பாண்டே. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் எனக் கூறி சர்ச்சைக்கு ஆளானார். தொடர்ந்து அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தார்.
இந்த சூழலில் கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பதிவிடப்பட்டிருந்தது. இது பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரைப் பலரும் தொடர்பு கொண்ட போது, யாராலும் நெருங்க முடியவில்லை எனவும் செய்திகள் வெளியானது. மேலும் எங்கு இறந்தார்? எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், அவரது உடல் எங்கு அடக்கம் செய்யப்படவுள்ளது என பல்வேறு கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருந்தது, பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது.
அதோடு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை தடுக்கும் வகையில் 9 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்கின்ற திட்டத்தை தொடங்கியுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பிற்கு அடுத்த நாளே பூனம் பாண்டே கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது. இதனிடையே பூனம் பாண்டேவின் முன்னாள் கணவர், சாம், “பூனம் பாண்டே இறப்பு நிச்சயமாக உண்மையாக இருக்க முடியாது. விரைவில் இது குறித்து பதிலளிக்கிறேன்” என அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், பூனம் பாண்டே உயிரோடு இருப்பதாக அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நான் உயிரோடு தான் இருக்கிறேன். கர்ப்பப்பைவாய்ப் புற்றுநோயால் நான் பாதிக்கப்படவில்லை. இந்த நோயை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல், அதைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமல், ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலைவரை சென்றுள்ளனர். மற்ற புற்றுநோய்களைப் போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். இந்த நோயினால் யாரும் உயிரை இழக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் எங்களிடம் உள்ளன. விமர்சன விழிப்புணர்வுடன் ஒருவரையொருவர் மேம்படுத்தி, ஒவ்வொரு பெண்ணும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படுவதை உறுதி செய்வோம்” என்றுள்ளார்.