மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே கடந்த ஜனவரி மாதம் இயக்குநர் மணிரத்னம் வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி மணிரத்னம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் மனு கொடுத்திருந்தார். அந்த புகார் மனுவில், "வந்தியத்தேவன் கதாபாத்திரம் பெண்கள் பின்னால் திரியும் ஒரு காதல் மன்னன் போல பொய்யாக சித்தரிக்கப்பட்டுள்ளது. சோழ பேரரசில் முக்கிய அங்கம் வகித்த வந்தியத்தேவன் குறித்து தவறாக சித்தரித்து மக்கள் மத்தியில் தவறான எண்ண அலைகளை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் மணிரத்னம் கொண்டு சேர்த்துள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ராஜா மற்றும் பரதன் சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரரிடம், “பொன்னியின் செல்வன் நாவலைப் படித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர், “நாவலைப் படிக்கவில்லை” எனப் பதிலளித்துள்ளார். “நாவலைப் படிக்காத நிலையில் எப்படி வரலாற்றைத் திரித்துள்ளதாகக் கூறமுடியும்” எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், “இப்படம் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, வரலாற்றைத் தழுவி எடுக்கப்படவில்லை” எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.