ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் படம் 'பதான்'. அண்மையில் இணையத்தில் வெளியான இப்படத்தின் 'பேஷரம் ரங்' பாடலில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் காவி நிற உடை கடந்த சில நாட்களாக சர்ச்சையைக் கிளப்பி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. காவி நிற உடையை மிகவும் கவர்ச்சியான முறையில் தீபிகா படுகோனே அணிந்திருப்பதாக இந்துத்துவா ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், #BoycottPathaan #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்குகளை வைரலாக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் பாஜகவை சேர்ந்த மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகள் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் மத்தியப்பிரதேசத்தில் பதான் படத்தை வெளியிடத் தயாரிப்பாளர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அயோத்தியைச் சேர்ந்த 'அனுமன்காரி' மடத்தைச் சேர்ந்த ராஜு தாஸ், பதான் திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்குகளைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார். மத்தியப்பிரதேசத்தில் இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் பதான் திரைப்படத்தைத் தடை செய்யக்கோரி ஷாருக்கான் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.
நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், காவி உடை அணிந்து பாலியலில் ஈடுபடுகிறார்கள்; அதெல்லாம் தவறில்லையா எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதனிடையே ஷாருக்கான் 'பதான்' படம் எனக் குறிப்பிடாமல் சமூக வலைத்தளத்தில் வரும் எதிர்மறை விமர்சனம் குறித்து ஒரு மேடையில் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்த சர்ச்சை தொடர்பாக பா.ஜ.க எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். "காவி நிறத்தை தவறாகச் சித்தரித்துள்ள இப்படத்தை யாரும் பார்க்கக் கூடாது. அவர்களின் எந்தப் படத்தையும் பார்க்கக் கூடாது. அவர்களைச் சீக்கிரமே நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். அந்தக் காவி நிற உடைக் காட்சியை மாற்றவில்லை என்றால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். காவி நிறம் என்பது நம் நாட்டின் பெருமை. அது தேசியக்கொடியிலும் உள்ளது. அதனை அவமதிக்கும் முயற்சி நடந்தால், யாரையும் தப்ப விடமாட்டோம். தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளும் போராட்டங்களும் நடத்தப்படும்" எனப் பேசியுள்ளார் பிரக்யா சிங் தாக்கூர்.