பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரிஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் என்பவருடன் மோதி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார். ஆனால் தற்போது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் எடை 100 கிராம் அதிகமாக இருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பேரதிர்ச்சியை எழுப்பி உள்ளது.
வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு முன்பாக தனது உடல் எடையைக் குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். அதனால் அவர் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் சம்மேளனம் அவருக்குத் துணையாக இருப்பதாகவும் வினேஷ் போகத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் எனப் பலரும் வினேஷ் போகத்துக்கு சமூக வலைதளங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகைகள் சமந்தா, டாப்சி ஆகியோர் தங்களது ஆறுதலைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை பார்வதி திருவோத்து, “வினேஷ்... நீங்கள்தான் எங்கள் தங்கப் பதக்கம்! நீங்கள் வெற்றி பெற்றவர்! உங்களுக்கு என்னுடைய மரியாதையைத் தெரிவித்து உங்களுடன் நிற்கிறேன்” என இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் நடிகை ஆலியா பட்டும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், வினேஷ் போகத்தை குறிப்பிட்டு, “ நீங்கள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு உத்வேகம். உங்கள் துணிச்சலையும் தைரியத்தை எதுவும் பறிக்க முடியாது. வரலாற்றை உருவாக்க நீங்கள் அனுபவித்த கஷ்டங்களை எதுவும் அகற்ற முடியாது. நீங்கள்தான் எங்களுக்கு தங்கப்பதக்கம், நீங்கள்தான் இரும்பு பெண். நீங்கள் இந்த யுகத்திற்கான சாம்பியன்! உங்களைப் போல் யாரும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.