இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குநர் கே.சி.கௌதமன் இயக்கத்தில் நடிக்கிறார்.
இதனிடையே பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றிற்கு பார்த்திபன் சென்றுள்ளார். அதில் கலந்து கொண்டு பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். வேங்கைவயல் விவகாரம் குறித்த கேள்விக்கு, “நான் நிறைய விஷயங்களுக்காக காவல் துறையினரை அணுகியிருக்கிறேன். அப்போது எனக்கு ஒன்று புரிந்தது. அவர்களுக்கு ஏகப்பட்ட அழுத்தம் இருக்கிறது. புது விஷயம் வந்த பிறகு பழைய விஷயங்கள் இன்னும் பழையதாக மாறி விடுகிறது. இதனால் ஒவ்வொரு விஷயமும் புதுசாக வர வர அவர்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினாலே பழைய விஷயங்களை கவனிக்க முடியாமல் போகின்றது. ஆனால் வேங்கைவயல் விவகாரத்தில் அவர்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சி. அதைப் பற்றி எதிர் கருத்து சொல்லும் போது அதைப் பற்றி வேறு ஒருவர் ஒரு கருத்து சொல்ல... இது இப்படியே போய் கொண்டு இருக்கும். அதனால் இதை கடந்து விடலாம்.
நான் கவனித்து கொண்டே இருக்கிறேன் ஒரு கட்சி ஆட்சிக்கு வரும்போது அவர்களுக்கு எதிர்கட்சியாக இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்கள் நாளைக்கு ஆட்சிக்கு வந்தால் அவர்களுக்கு ஆளும் கட்சியாக இருந்தவர்கள் எதிர்கட்சியாக மாறி எதிர்ப்புகள் தெரிவிக்கிறார்கள். அதனால் இங்கு எதிர்ப்பதற்கும் பேசுவதற்கும் எதோ ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கிறது. அரசாங்கத்தை ஆதரித்து நல்ல விஷயங்களை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். அதற்காக கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் அவர்களின் குற்றத்தையும் சுட்டிக் காட்ட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கவில்லை. மக்கள் போராடியதால் தான் கிடைத்தது. அதனால் மக்கள் பிரச்சனையை மக்கள் பேசினால் தான் தீர்வு கிடைக்கும். வேங்கைவயல் விவகாரத்தில் காவல் துறையினர் துரிதமாக செயல் பட வேண்டுமென்பது எனது வேண்டுகோள்” என்றார்.