நடப்பாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று(28-06-24) முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விருதும், ஊக்கத்தொகையும் விஜய் வழங்கி வருகிறார்.
இதில் பேசிய மாணவரின் பெற்றோர் ஒருவர் விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்து அரங்கை அதிரை வைத்தார். அதில் பேசிய மாணவரின் பெற்றோர், “வரும் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமரும் பட்சத்தில், விஜய் முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் நான் 3 வேண்டுகோளை மட்டும் முன்வைக்கிறேன். தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என உங்களிடம் பணிவோடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அதே போல், தமிழகம் ஒரு சாதியற்ற சமூகமாக மாற வேண்டும், மலர வேண்டும் என்பதற்காக சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு சாதியற்றோர் என்ற அடையாளத்தை வழங்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தமிழகத்தில் குடிநோயாளிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறை ஒரு குடிநோயாளிகளான சமூகமாக மாறிவிடக்கூடாது. ஆகவே, நீங்கள் முதலமைச்சராகப் பதவியேற்கும் முதல் கையெழுத்தாகத் தமிழகம் ஒரு மதுவற்ற மாநிலமாக மாற வேண்டும், மலர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு தமிழ் மக்கள் தெருவெல்லாம் உங்கள் பேச்சாக இருக்கட்டும். அதற்கு உங்கள் அறிவார்ந்த செயல்பாடுகளே எடுத்துக்காட்டாக இருக்கட்டும். தமிழ் குலம் ஒரு நாள் உன்னைத் தலைமையில் அமர்த்தும் என அன்போடு வாழ்த்துகிறேன்” எனப் பேசினார்.