புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள இறையூர் கிராமத்தில் மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பா.ரஞ்சித் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், "தமிழ்நாடு சமூக நீதி பேசும் மாநிலம் என்று சொல்லுகிற அதே சமயத்தில் தான் சாதி ரீதியான பிரச்சனைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இப்போது நடந்த இந்த புதுக்கோட்டை சம்பவம் தற்போது வெளியில் தெரிந்துள்ளது. ஆனால் வெளியில் தெரியாத நிகழ்வுகள் பல மாவட்டங்களில் இருக்கிறது. குறிப்பாக புதுக்கோட்டை, திருவண்ணாமலை, செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் சாதி ரீதியான கொடுமைகள் மிக அதிகம் நடப்பதாக ஒரு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இதுபோன்ற சாதிய கொடுமைகளுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியமானது. ஏனென்றால், சட்டங்கள் இருக்கிறது, அரசு மாறிக்கிட்டே இருக்கு. அரசு மாறினாலும் மாறாவிட்டாலும் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து நடப்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். சில இடங்களில் மக்களாகிய நாம் தான் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்." என்றார்.