மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளன. இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்தது. உதயநிதி நடிப்பில் கடைசி படமாக இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் இசை வெளியீட்டிற்காக படக்குழுவினர் உட்பட பல திரை பிரபலங்கள் வருகை தந்த நிலையில், படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது, “மாரி செல்வராஜுக்கு வாழ்த்துகள். மாமன்னன் படம் பெயரைப் போலவே பாடல் வெளியீடும் பிரம்மாண்டமாக நடக்கிறது. படத்தின் சில காட்சிகளை நான் பார்த்தேன். அருமையாக இருந்தது. வடிவேலு சாரை இப்படி ஒரு கேரக்டரில் இதற்கு முன் நாம் பார்த்திருக்க மாட்டோம். அப்படி ஒரு சீரியசான கேரக்டர் செய்திருக்கிறார். பாடல்கள் ரொம்ப நன்றாக இருக்கின்றன.
மாரி செல்வராஜ் தன்னுடைய முதல் இரண்டு படங்களை விட வெளிப்படையான அரசியலை இதில் பேசியிருப்பார். இதுவரை வெளியான பாடல்களே அதற்கான உதாரணம். சினிமா என்பது ஜனநாயகத்தன்மை உடையது என்று நான் நம்புகிறேன். தியேட்டர் என்பது பலவிதமான மக்கள் உள்ளே வந்து பார்க்கும் ஒரு இடம். அந்த இடத்தில் இதுவரை பேசப்படாத, மௌனங்களைக் கலைக்கும் கதைகளை நாம் சொல்லும்போது குறைந்தபட்சம் ஒரு உரையாடல் நிகழ வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அது நிகழ்ந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்றார்.