Skip to main content

”அசிஸ்டண்டா நயன்தாரா முன்னால திட்டு வாங்கிய நான் இன்னைக்கு அவங்கள வச்சே படம் பண்ணிருக்கேன்” - ஜி.கே. விக்னேஷ் நெகிழ்ச்சி

Published on 16/06/2022 | Edited on 16/06/2022

 

O2 Movie Director

 

ஜி.கே. விக்னேஷ் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆக்சிஜன் (O2). இப்படம் நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ஜி.கே. விக்னேஷை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் O2 படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

”இந்தக் கதையை எழுத நான் கொடுத்த உழைப்புதான் என்னை இந்த இடத்திற்குக் கொண்டுவந்துள்ளது. o2 கதையில் நடிக்கச் சம்மதம் தெரிவித்ததற்காக நயன்தாரா மேம்க்கு நன்றி. பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஷார்ட் ஃபிலிம் எடுத்தேன். அதன் மூலமாக சினிமாவுக்குள் வந்து தற்போது என்னுடைய அறிமுகப்படத்தை இயக்கியிருக்கிறேன். படத்தில் சில காட்சிகள் ரொம்பவும் கடினமாக இருக்கும். ஆனால், நயன்தாரா மாதிரியான அனுபவம் வாய்ந்த நடிகர் நடிக்கும்போது அதை எளிமையாகப் படமாக்க முடிந்தது. இது உன்னுடைய முதல் படம். நல்லா பண்ணு என்று நயன்தாரா மேமும் என்கரேஜ் பண்ணார். கதையில் அவருக்காக எந்த மாற்றமும் செய்யவில்லை. நான் என்ன  எழுதினேனோ அதில்தான் நடித்தார். அறிமுக இயக்குநர் என்று நினைக்காமல் என் மீது நம்பிக்கை வைத்து நடித்ததற்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 

 

இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்ஸிஜனை மையப்படுத்திய கதை. படத்தில் யூடியூப் பிரபலம் சிறுவன் ரித்விக் சிறப்பாக நடித்துள்ளார். நான் சொல்வதை ஈஸியாக உள்வாங்கிக்கொண்டு நடித்தார். இவ்வளவு சின்ன வயதிலேயே அவருக்கு அந்தத் திறமை இருக்கிறது. முழுப்படமும் ஒரே பஸ்ஸிற்குள் நடப்பதால் ஆடியன்ஸுக்கு போரடித்துவிடக்கூடாது என்று கூடுதல் மெனக்கெடலுடன் திரைக்கதை எழுதினேன். டெக்னிக்கலாகவும் படம் சிறப்பாக வந்துள்ளது.

 

மாஸ் படத்தில் நான் உதவி இயக்குநராக வேலை பார்க்கும்போது நயன்தாரா மேம் முன்னால் செட்டில் நிறைய திட்டு வாங்கிருக்கேன். ஒருமுறை நான் திட்டு வாங்கியதும் அவங்க சிரிச்சாங்க. அப்படி இருந்த நான் இன்னைக்கு அவங்கள வச்சு படம் பண்ணிருக்கேன் என்று நினைக்கும்போதே ரொம்பவும் சந்தோசமா இருக்குது”. இவ்வாறு ஜி.கே. விக்னேஷ் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்