2017ஆம்-ஆண்டு வெளியான 'மாநகரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளையும் பெற்றார். இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து கார்த்தி நடிப்பில் 'கைதி' மற்றும் விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' படங்கள் வெளியானது. இரண்டு படங்களுமே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பபை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் மற்றும் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (03.06.2022) வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கதையை பிரபாஸ் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ், பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸிடம் ஒரு கதை கூறியுள்ளதாகவும், எதிர்பார்த்த அளவு கதை இல்லை என பிரபாஸ் கூறி நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தை அடுத்து விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.