மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கு தொடர்ந்து நடந்து வருவதாக சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை இந்தியத் திரையுலகை உலுக்கியுள்ளது. பிரபல நடிகைக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தையடுத்து, படப்பிடிப்பில் நடிகைகள் மற்றும் பணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை குழுவை அமைத்தது கேரள அரசு. இக்குழு கடந்த 2019ஆம் ஆண்டு அம்மாநில முதல்வரிடம் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஆய்வறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆய்வறிக்கை வெளியான பிறகு நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை பகிரங்கமாக பொது வெளியில் பேசியும் காவல் நிலையத்தில் புகாரளித்தும் வந்தனர். இந்த புகார்களில் சிக்கும் நடிகர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது சிறப்பு புலனாய்வு குழு. புகாரில் சிக்கிய பிரபலங்களில் இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், எம்.எல்.ஏ முகேஷ், ஜெயசூர்யா, இடவேள பாபு, மணியம் பிள்ளை ராஜு, பாபுராஜ், நிவின் பாலி உள்ளிட்டோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயசூர்யா மீது இரண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ முகேஷ், இடவேள பாபு ஆகியோருக்கு முன் ஜாமீன் கிடைத்துள்ளது.
இதனிடையே நிவின் பாலி மீது வந்த பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு அவர் மறுப்பு தெரிவித்து சட்டப்படி அதை எதிர்கொள்வேன் என்றார். அதைத் தொடர்ந்து இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன், நிவின் பாலி வழக்கில் பாலியல் துன்புறுத்தல் துபாயில் நடந்ததாக கூறப்படும் தேதியன்று நிவின் பாலி தன்னுடன் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ படத்தின் படப்பிடிப்பில் இருந்ததாக தெரிவித்தார். மேலும் நடிகை பார்வதி கிருஷ்ணா மற்றும் பகத் மானுவெல் ஆகியோர் ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ படப்பிடிப்பில் நிவின் பாலி தங்களுடன் இருந்ததாக புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு ஆதரவாக பேசியிருந்தனர். இந்த விவகாரத்தில் புகார் தெரிவித்த நடிகை மற்றும் அவர் கணவர் மீது விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு விசாரணை குழு கூடுதல் ஆதாரங்களை விசாரிக்க துபாய் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் சதி இருப்பதாக தற்போது நிவின் பாலி புகார் அளித்துள்ளார். கேரள காவல்துறை ஏ.டி.ஜி.பி.-யிடம் அவர் கொடுத்த புகார் மனுவில், தனக்கு எதிராக சதி தீட்டுவதாகவும் குற்றச்சாட்டின் பின்னணியில் திரையுலகை சேர்ந்த சிலர் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.