Skip to main content

'உருவாகும் லோகேஷின் புது யூனிவர்ஸ்' - விஜய்க்கு வில்லனாகும் நிவின் பாலி

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

nivin pauly is play villan role in thalapathy 67 movie

 

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இணைந்த லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய்யை வைத்து 'தளபதி 67' படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்திற்கானப் பணிகளில் லோகேஷ் கனகராஜ் தனது குழுவுடன் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். 

 

ad

 

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. 

 

இந்நிலையில் 'தளபதி 67' படத்தில் வில்லன்களில் ஒருவராக நிவின் பாலி நடிக்கவுள்ளதாகவும், அதற்கானப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்  தகவல் வெளியாகியுள்ளது. பிரித்திவிராஜ் கால்ஷீட் பிரச்சனை காரணமாக விலகிவிட்டதாகவும் அதற்குப் பதில் நிவின் பாலியை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருவதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிவின் பாலி தமிழில் ராம் இயக்கத்தில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.  

 

லோகேஷ் கனகராஜ், கைதி படத்தில் வரும் கதாபாத்திரங்களைத் தனது அடுத்த படமான 'விக்ரம்' படத்திலும் கொண்டு வந்தார். இது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதோடு 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்' என ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். அதன்படி 'தளபதி 67' படத்தில் தன் கதாபாத்திரங்களின் மூலம் புது யூனிவர்ஸ் உருவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான 'மாஸ்டர்' படம் வருகிற நவம்பர் 18ஆம் தேதி ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு ஜப்பானில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்