ஜெயம் ரவி மற்றும் யோகி பாபு இணைந்து நடித்து வெளியாகியுள்ள படம் கோமாளி. இப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் ட்ரைலர் வெளியானபோது ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஒரு காட்சி வந்ததால் இப்படத்திலிருந்து அக்காட்சியை எடுக்க சொல்லி ரஜினி ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது.
இதனை அடுத்து யோகி பாபு, வருண் நடிப்பில் தயாராகும் பப்பி படமும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த படத்தை முரட்டு சிங்கிள் என்பவர் இயக்குகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜியை வைத்து வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு பக்கத்தில் நித்யானந்தாவின் படமும், இன்னொரு பக்கத்தில் ஜானி சின்ஸ் என்ற பார்ன் ஸ்டாரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதற்குதான் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
“வருண், யோகிபாபு நடிக்கும் ‘பப்பி’ படத்துக்காக நித்யானந்தாவையும், நிர்வாண படங்களில் நடிக்கும் அமெரிக்காவை சேர்ந்த ஜானி சின்ஸையும் இணைத்து முன்னோட்டம் வெளியிட்டு உள்ளனர். இது இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையிலும் இளைஞர்கள் மனதில் வக்கிர எண்ணத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே படத்தின் இயக்குனர் முரட்டு சிங்கிள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சை காட்சிகளை நீக்கிய பிறகே படத்தை திரைக்கு கொண்டு வர வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், “நித்யானந்தாவின் பெயருக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில் படக்குழுவினர் செயல்பட்டுள்ளதாகவும், அவரது அனுமதியின்றி அவரின் புகைப்படத்தை விளம்பரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டித்தக்கது” என்று நித்யானந்தாவின் வழக்கறிஞர் குழு ‘பப்பி’ படக்குழுவுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.