கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல் காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாகத் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சரத்குமார், சூர்யா, ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதனிடையே நயன்தாரா திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்புவதாக கூறி ரூ.25 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. மேலும் அதை இயக்கும் பொறுப்பை கெளதம் மேனனிடம் கொடுக்கப்பட்டது. அதனால் திருமணத்தில் யாரும் புகைப்படம் எடுக்கக்கூடாது என ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்புவதாக கூறிய ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் சில புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தனர். அதனால் இருவரும் ஒப்பந்தத்தை மீறி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.