தேசிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ரிலீஸுக்குத் தயாராக உள்ள படங்கள் அனைத்தும் அடுத்து திரையரங்குகள் திறக்கும் வரை காத்திருக்காமல் ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
அந்த வகையில் தமிழில் முதல் படமாக ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால், அதன்பின் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே பிரச்சனை உண்டானது. இதன்பின் இரு தரப்பினர்களுக்குள் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வந்தனர். ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் இதுதான் சரியான நேரம், குறைந்த அளவிலான பட்ஜெட் படங்களுக்கு ஓ.டி.டி.தான் சரியான தீர்வு என்று ஆணித்தரமாகக் கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து ஜோதிகாவின் படம் மட்டும் வெளியாகவில்லை, மேலும் சில படங்கள் வெளியிட திட்டம் இருப்பதாகத் தயாரிப்பாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதே நிலைதான் மற்ற மொழி சினிமாத்துறைகளிலும். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்', ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது அமேஸான். அதேபோல மற்ற மொழிகளிலும் என்னென்ன படங்கள் வெளியிட இருக்கின்றன என்பது குறித்தும் அறிவிப்பு வந்துள்ளது.
அதன்படி, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொத்தமாக 7 படங்களை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் அதிக பயனர்களைக் கொண்ட 'நெட்பிளிக்ஸ்' நிறுவனம், இந்தியாவிலும் கோலோச்ச முயற்சி செய்து வருகின்றது. ஆனால், அதற்குக் கடுமையான போட்டியாளராக அமேஸான் இருக்கிறது.
தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனமும் அமேசானுக்குப் போட்டியாகப் பல மொழி படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும், அதில் மூன்று தமிழ் படங்களை நேரடியாகத் தனது பிளாட்பார்மில் ரிலீஸ் செய்யப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.