கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 4,281 லிருந்து 4,421 ஆக உயர்ந்துள்ளது.இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 லிருந்து 114 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 319 லிருந்து 326 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தினக்கூலிப் பணியாளர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியத் தயாரிப்பாளர்கள் கில்டின் நிவாரண நிதிக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், “மின் வல்லுநர்கள், தச்சர்கள், சிகை அலங்காரம் செய்பவர்கள், ஒப்பனை செய்பவர்கள் எனத் தொலைக்காட்சி மற்றும் திரைத் தயாரிப்பில் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் பணியாளர்களுக்கு உதவும் இந்தியத் தயாரிப்பாளர்கள் கில்டு அமைப்புடன் இணைவதில் பெருமை கொள்கிறோம். இந்தியாவில் இருக்கும் குழுவினர் என்றுமே நெட்ஃபிளிக்ஸின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தனர்.இப்போது எதிர்பாராத இந்த வேளையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு எங்களால் ஆனதைச் செய்ய விரும்புகிறோம்" என்று நெட்ஃபிளிக்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியாவில், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், அதான் தயாரிப்புகளில் பணிபுரியும் தினக்கூலிப் பணியாளர்களுக்கு நான்கு வாரங்களுக்கான சம்பளத்தைத் தருவதாக அறிவித்திருந்தது.