நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தார்கள். இந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்திருக்கலாம் என தகவல் வெளியான நிலையில் அது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சட்ட விதிமுறைகளை மீறி இருவரும் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருகிறது.
இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்ரமணியன் இருவரிடமும் விளக்கம் கேட்கப்படும் எனவும் பின்பு இந்த விவகாரம் குறித்து Director of medical services விசாரணை நடத்த வேண்டுமா என முடிவு எடுப்பார்கள் என தெரிவித்திருந்தார். இதனையடுத்து சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு அதில் விதி மீறல்கள் இருக்கிறதா மற்றும் முரண்பாடுகள் உள்ளதா என்பதை கண்டறிந்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரின் மீதும் வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "மத்திய மற்றும் மாநில அரசுகள் வாடகைதாய் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வந்துள்ளன. கர்ப்பபையில் பிரச்சனை, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத சூழல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் மற்றும் பொதுவானது, எனவே இது சமூகத்திற்கு எதிரான கடுமையான குற்றமாகும். மேலும் இந்த முறையைத் தேர்ந்தெடுக்க இளம் தலைமுறையினரைத் தூண்டியுள்ளது. மக்கள் மத்தியில் சட்ட விரோதமாக வாடகைத் தாய் முறையை ஊக்குவிக்கும் வகையில் இவர்கள் செயல்பாடு அமைந்துள்ளது. எனவே இதனுடன் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். " என புகாரில் குறிப்பிட்டுள்ளது.